இலங்கை தமிழரசு கட்சி அல்லது கூட்டமைப்பின் பிரிவைப் பற்றி கதைப்பவர்களுக்கு..
இப் படத்தை பார்க்கவும் இதில் ஒவ்வொரு காலப் பகுதிகளில் தேர்தலில் ஆசன பங்கீட்டை மையமாக வைத்து பிரிந்தவர்களின் விவரம் உள்ளது…
‘கொள்கையினால் பிரிந்தோம்’ என்பது எல்லாம் மக்கள் தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் சுத்தும் "பூ"...
ஜனநாயக கட்சிக்குள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் மத்தியில் கட்சியாக இணைந்து, பொதுவான நோக்கத்துக்காக, சேர்ந்து செய்யப்படுவது என்பது; இவர்களுக்கு இயலாத காரியம்.
பிரிந்தவர்கள் இன்னும் பிரிந்த வண்ணமே உள்ளனர்..
வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் வீட்டை குறை சொல்ல தான் வேண்டும்..
இதுவே இங்கு நடந்தது...
இதுவே இங்கு நடக்கின்றது...
‘வீடு ஏனென்றாலே சுமந்திரன்’ என்ற இவர்களுடைய ஒரு புரிதலின் காரணமாகத்தான்.. சுமந்திரனை காரணம் காட்டி லாபகரமாக தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்..
"வீடு இன்றும் ஒன்றாக, மற்றவர்களோ நான்கு புறமும் நாலு கட்சிகளாக"
தமிழரசுக் கட்சிக்கெதிரான விசமப் பிரச்சாரங்களை கட்சி ஆதரவாளரகள் கருத்திலெடுக்க வேண்டாம்!
அன்பான தமிழரசு உறவுகளே மற்றும் வாக்காளர்களே,
உங்களிடத்தில் ஒரு சில முக்கிய விடயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அண்மைய நாட்களிலே, நாங்கள் இந்த தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த போது தமிழரசு கட்சி உடைந்து விட்டது, அதை உடைத்து விட்டார்கள், சுமந்திரன் அதை உடைத்துவிட்டார், என்ற பரப்புரை ஒன்று அத்தோடு சேர்ந்து உண்டானது நீங்கள் அறிவீர்கள். எங்களுடைய வீடு உடையவில்லை, எங்களுடைய வீடு பத்திரமாக, பாதுகாப்பாக இருக்கின்றது. கட்சி எந்த விதத்திலும் சிதைந்துவிடவில்லை. அது ஒரு பொய்யான பரப்புரை. தேர்தல் காலத்திலேயே வேண்டுமென்றே செய்யப்படுகின்ற ஒரு பிரச்சாரம். தமிழரசு கட்சியில் அப்படி என்ன தான் நடந்திருக்கின்றது?
தமிழரசு கட்சியிலே இந்த வருடம் ஆரம்பத்திலே நடந்த தலைவர் தெரிவு ஒன்றை வைத்து கட்சிக்குள்ளே ஒற்றுமையில்லை, கட்சி இரண்டாக பிரிந்திருக்கிறது, இரண்டு அணிகளாக இருக்கின்றது என்ற பிரச்சாரத்தை கட்சிக்கு வெளியிலே இருக்கிறவர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள். தலைவருக்கு ஒரு போட்டி நடந்தது, அது அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு ஜனநாயக நாட்டிலேயும் ஜனநாயக கட்சிகளிலே, இப்படியாக தலைவர் தெரிவுக்கு போட்டி நடப்பது வழக்கம். அது அந்த கட்சியை உடைப்பதில்லை. அது கட்சியினுடைய ஜனநாயக மாண்பை இன்னும் வெளிப்படுத்துகின்ற ஒரு சக்தியாக இருக்கும். நாட்டிலே தேர்தல் நடக்குமா இருந்தால், எங்களுடைய சங்கக் கடையிலே, கூட்டுறவு சங்கத்திலே தேர்தல் நடக்கின்றதாக இருந்தால், ஏன்? எங்கள் கோயில் நிர்வாகத்திற்கும் தேர்தல் நடந்து நிர்வாக சபை தெரிவு செய்யப்படுமாக இருந்தால் அதெல்லாம் ஒற்றுமையின்மையின் அடையாளங்கள் அல்ல அவை ஜனநாயகத்தின் மேம்பாடுகள். எங்களுடைய கட்சி ஒரு ஜனநாயக கட்சி, எங்களை சுற்றியிருக்கிற ஏனைய காட்சிகள் அப்படியானவை அல்ல.
அவர்களுக்கு கிளைகள் கிடையாது, உறுப்பினர்கள் இருக்காது, அவர்களுக்கு தேர்தல் நடப்பதில்லை, அவர்களுக்கு நிர்வாகிகள் மாறுவதில்லை, அது ஜனநாயக பண்பில்லாத தன்மை ஆனால், இலங்கை தமிழ் அரசுக் கட்சி அப்படியானதல்ல. ஒரு தேர்தல் நடைபெற்றது, தேர்தலிலே மூன்று பேர் போட்டியிட்டோம். அதிலே ஒருவருக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. தன்னுடைய வாக்கையும் அவர் தனக்கே அளிக்கவில்லை. ஏன் அந்த தேர்தலிலே போட்டியிட்டாரோ தெரியாது. மற்ற இருவரில் நான் ஒருவன், மற்றது திரு. சிறீதரன். திரு. சிறீதரன் கூடிய வாக்குகளாலே வெற்றிபெற்றார். அந்த வெற்றியை நான் அந்த வேளையிலேயே முழுமனதோடு ஏற்றிருந்தேன், பகிரங்கமாக அதை அறிவித்தேன், அவருடைய கையை பலப்படுத்துவேன், அவருடன் சேர்ந்து கட்சியிலே நான் உழைப்பேன் என்ற வாக்குறுதியை பகிரங்கமாக சொல்லியிருந்தேன். அதைத்தொடர்ந்து, எங்களுடைய நிர்வாக தெரிவுகள் இடம்பெறுவதற்கு ஆறு நாட்களுக்கு பின் திரும்பவும் பொதுச்சபை கூடியது. கூடியபோது இந்த தலைவர் தெருவிலே கட்சி இரண்டாக பிரிந்திருந்தது ஆகையினாலே இரு அணிகளும் ஒன்றாக வேண்டும் என்கின்ற கோரிக்கை எழுந்தது. நாங்கள் அதனை மதித்து, நாங்கள் இருவரும் சேர்ந்து எங்களுடைய மத்திய செயற்குழு எப்படியாக இருக்கவேண்டுமென்ற இணக்கப்பாட்டிற்கு வந்து அந்த இணக்கப்பாட்டை எங்களுடைய முன்மொழிவாக திரு.சிறீதரன் பொதுச்சபைக்கு அறிவித்தார். அந்த வேளையிலே சில சலசலப்புகள் ஏற்பட்டது ஆனால் இறுதியிலே, வழிமொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்குப்பிறகும் ஒரு சிலர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்ததன் காரணமாக ஒரு வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டு, மிகவும் அமைதியான முறையிலே அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எண்ணப்பட்டு அந்த முன்மொழியப்பட்ட பெயர்பட்டியல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்த நாள் காலையிலே எங்களுடைய மாநாடு நடாத்தப்பட்டு இவையெல்லாம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு திரு.சிறீதரன் தலைமை பொறுப்பை ஏற்றிருப்பார். அப்படியாக அறிவிக்கப்பட்டு, "நாளை காலை 10.00 மணிக்கு கூடுவோம்" என்று சொல்லப்பட்டது.
ஆனால் அதற்குப் பின்னர் துரதிஷ்டவசமாக அது பிற்போடப்பட்டுவிட்டது. பிற்போடப்பட்டதை அறிந்தபிறகு, நான் தலைவரோடும், தெரிவுசெய்யப்பட்ட தலைவரோடும் பேசி, உடனடியாக மாநாட்டை வைக்கவேண்டுமென்று வலியுறுத்தினேன். திரு.சிறீதரனோடு சென்று திரு. சேனாதிராஜாவை சந்தித்து இதை திரும்பவும் வலியுறுத்தினேன். ஆனால் கைவிட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரின் அதிருப்தி காரணமாக அது நடைபெறாமல் இழுபட்டது, இது நல்லதற்க்கில்லை என்று ஒரு நான்கு நாட்களுக்கு பிறகு திரு.சிறீதரனுக்கு பகிரங்கமாகவே ஒரு கடிதத்தை எழுதி, இந்த தலைமை பொறுப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினேன். அது நடக்கவில்லை. பிறகு இணங்கப்பட்ட விடயங்கள் மாற்றியமைக்கப்படுவதற்காக பொதுச்சபை திரும்பவும் கூடப்படவிருந்த வேளையிலே, இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை கட்டளைகள் பெறப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளிலே ஒரு வழக்கிலே என்னுடைய பெயர் கிடையாது, இன்னொரு வழக்கிலே நானும் ஒரு எதிராளி. அந்த திருகோணமலையில் இருக்கின்ற வழக்கிலே, என்னுடைய தாயாரின் மரணச்சடங்கு காரணமாக முதல் நாள் நான் கலந்துகொள்ள முடியவில்லை ஆனால் அதில் கலந்துகொண்ட மற்ற அனைத்து எதிராளிகளும் வழக்காளி சொல்லுவது சரி, அதற்கு இணங்கி நாங்கள் வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்று அதனை கையளித்திருக்கின்றார்கள். வழக்கு ஏட்டிலே அவர்களுடைய கையெழுத்து இருக்கின்றது. வழக்காளி சொல்லுவது அந்த வழக்கிலே தமிழரசு கட்சியினுடைய பொதுச்சபையிலே ஆகக்கூடியது 161 பேர் தான் இருக்கலாம். ஆனால் தலைவர் தெரிவிலே 321 பேர் வாக்களித்திருக்கின்றார்கள். இரட்டிப்பான எண்ணிக்கையானவர்கள் பொதுச்சபையிலே வாக்களித்திருக்கின்றார்கள் அது தவறானது என்று அவர் சொல்லியிருக்கின்றார். அதை கட்சியினுடைய, கட்சியை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற, திரு. சிறீதரன் உட்பட அதை சரியென்று ஏற்றிருக்கின்றார்கள். அந்த வழக்கினை அந்த ரீதியிலே நாம் முடித்துவிடலாம். அது தவறான சேர்கையாக இருந்தால் அந்த பொதுச்சபையில் அப்படியாக பிழையான வழியிலே செயற்பட்டிருந்தால் திரும்பவும் பொதுச்சபை கூடி சரியான வழியிலே இதனை முடிவுக்குக் கொண்டுவரலாம்.
அது எங்களுடைய கட்சியின் யாப்பினடிப்படையிலே செய்து முடிக்கவேண்டிய ஒரு விடயம். பொதுத்தேர்தல் வந்த போது திரும்பவும் எங்களுடைய நியமனக்குழு ஒரு கோரிக்கையினை விடுத்தது, நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரே பட்டியலிலே நாங்கள் போட்டிபோட வேண்டும் என்று. அதற்கு நாங்கள் இருவரும் இணங்கினோம். யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திலே நானும் திரு சிறீதரனும் இன்னும் ஏழுபேரும், ஒன்பது பேர்கொண்ட ஒரு பட்டியலிலே ஒன்றாகப் போட்டியிடுகின்றோம். எனக்கும், சிறீதரனுக்கும் பிளவு கிடையாது. நாங்கள் ஒரே பட்டியலிலே ஒன்றாகப் போட்டியிடுகிறோம். பிளவு எங்கே ஏற்படுகிறதென்றால், நியமனம் கிடைக்காததை வைத்துக் கொண்டு புதிய கூட்டுக்களாகவும், குழுக்களாகவும் போட்டியிடுபவர்களால் அது வருகிறது. அது கட்சியின் ஒற்றுமைக்கு நேர்ந்த கேடாக எண்ணப்படக் கூடாது. மாறாக, அது அந்த நபர்களது பதவி, பாராளுமன்ற ஆசன ஆசையைக் காட்டி நிற்கிறது.
தேர்தல் காலத்தில் மக்களைக் குழப்புவதற்காகவே தமிழரசுக் கட்சி உடைந்துவிட்டதென்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களைக் குழப்பும் முயற்சி. கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு, வெளியேறும் சுதந்திரம் இருக்கிறது. பலர் அதைச் செய்திருக்கிறார்கள். கட்சிக்குள் பிளவில்லை. கட்சிக்குள் இருப்பது கருத்து வேறுபாடு. அது எந்தவொரு ஜனநாயகக் கட்சிக்குள்ளும் இருக்க வேண்டியது. கருத்துவேறுபாடுகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் கட்சிக்குள் இருக்கிறது. கூட்டங்கள் நடைபெறுகிறது. முடிவுகள் எடுக்கப்படுகிறது. கட்சியின் நியமனக் குழுத் தெரிவு, பின்னர் நியமனக் குழுவின் முடிவுகள் அனைத்தும் ஏகமனதாகச் செய்யப்பட்ட தீர்மானங்கள். ஆகவே எமது ஆதரவாளர்கள், இந்த விஷமப் பிரச்சாரங்களை நம்ப்பாது . . . தமிழரது ஒரே ஜனநாயகக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு உங்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுகிறேன்.
– முகநூல் நேரலையில் சுமந்திரன் பேசியவற்றின் எழுத்தாக்கம்.