அரச சேவையாளர்களுக்கு சுமந்திரன் எழுதுவது | M A சுமந்திரன்

அரச சேவையாளர்களுக்கு சுமந்திரன் எழுதுவது | M A சுமந்திரன்

அன்பான அரச துறை வாக்காளர்களே,

பாரளுமன்றத் தேர்தல் - 2024

இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பு என்பது தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. ஆயுதப் போராட்டம் நடைபெற்ற மூன்று தசாப்தங்களில் எமது தாயகப் பூமியிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் வாழ்கிறவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டி பல காலமாகி விட்டது. போருக்குப் பின்னரான 15 வருட காலத்திலும் இத்தகைய புலம்பெயர்வு தொடர்ச்சியாக இடம் பெற்றுக் கொண்டேயிருக்கிறது.

ஒரு தேசம் அல்லது மக்கள் குழுமம் தொடர்ந்து அந்த அந்தஸ்தை பேண வேண்டுமாக இருந்தால் அதற்கான ஆள்புலத்தையும், அதில் வாழக் கூடிய விதமான பொருள் மற்றும் வாழ் ஆதாரத்தையும் பாதுகாத்து விருத்தி செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே அந்த மக்கள் தங்களைத் தாங்களே ஆளுகை செய்யும் உரித்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர் கடந்த 15 ஆண்டுகாலத்தில் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் சம்பந்தமாக சிந்தித்து செயலாற்றுவதற்கான பொருத்தமானதொரு தருணம் இதுவென்று நான் நினைக்கின்றேன்.

எமது அரசியல் விடுதலைக்கென்றே கால் நூற்றாண்டுக்குக் கூடுதலாக ஆயுதப் போராட்டமொன்று நிகழ்த்தப்பட்டது. ஆயுத முனையில் அறம் சார்ந்த அரசியல் விடுதலையை பெறமுடியாது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாக இருந்தபோதிலும், தம்மீது மோசமான அடக்குமுறைகளையும் வன்முறையையும் இலங்கை அரசுபிரயோகித்த பின்னணியில் வேறு வழியின்றி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அன்று எடுத்ததீர்மானத்தை இன்று வேறொரு சூழ்நிலையிலிருந்து நாம் மதிப்பிடவோ, குறை கூறவோ முடியாதென்பதை தொடர்ச்சியாக கூறி வந்துள்ளேன்.

அப்படியான பின்புலத்தில் கடந்த 15 வருட காலத்தில் எங்களுடைய அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக நாம் மேற்கொண்ட அணுகுமுறைகள் வெற்றியளித்துள்ளனவா என்ற கேள்வியின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வது அத்தியாவசியமானது என்று கருதுகிறேன்.

ஒரு கணம் எமது அரசியல் உரிமைப் போராட்டத்தை ஒருபுறம் வைத்துவிட்டு இக்காலகட்டத்தில் எமது சமூக மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளை நோக்குவோமாயின், நாம் பாரிய பின்னடைவுகளை தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்பது புலனாகும். இளையவர்கள் மத்தியிலே பரவலாகி இருக்கின்ற வாள் வெட்டுக்குழுக்கள் போன்ற வன்முறைக் கலாச்சாரமும், போதைவஸ்து பாவனையும் இதற்கான சான்றாகும். ஆனால் துரதிஷ்டவசமாக, இவை எமது இளைஞர், யுவதிகளை வலுவிழக்க செய்வதற்கான முயற்சிகளாகும். ஆட்சியாளர்களே இவற்றை ஊக்குவிக்கிறார்கள் என்பதில் உண்மை இருக்கும் போதிலும், இவற்றைக் கட்டுப்படுத்தும் முதலாவது பொறுப்பு எமது அரசியல் மற்றும் சமூக தலைவர்களிடம் தான் இருக்கின்றது.

வன்முறைக்கும் போதைப் பாவனைக்கும் சினிமா போன்ற வெளி சக்திகள் பெரும் செல்வாக்கை செலுத்தினாலும் கூட, அந்த தாக்கங்களை மழுங்கடிக்கின்ற விதமான செயற்பாடொன்றையும் முன்னெடுக்காதது எமது தவறேயாகும். இந்தப் பின்னடைவுகள் தொடருமாக இருந்தால், அரசியல் விடுதலை ஒன்று எமக்கு கிடைத்தாலும் கூட அதைப் பொறுப்போடு நிர்வகிக்கின்ற திறன் அற்றவர்களாக எமது இளைய சமுதாயத்தினர் மாறியிருப்பார்கள். எமது இளையவர்கள் கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் தங்களது அபரிமிதமான திறனை உள்நாட்டிலும் பிராந்தியத்திலும், சர்வதேச மட்டத்திலும் கூட அண்மைய காலங்களில் வெளிப்படுத்தியிருப்பது எமக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய விடயம். இது இளைய சமுதாயத்தின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு நாம் மூலதனங்களை செய்ய வேண்டும் என்பதை அழுத்திச் சொல்கின்றன.

இதைப் போலவே பொருளாதார ரீதியில் மிக மோசமாக நலிவடைந்திருக்கும் எமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு புலம் பெயர்ந்திருக்கின்ற எமது உறவுகளின்முயற்சிகளின் பயனாக பல செயற்திட்டங்கள் ஆங்காங்கே செய்யப்பட்டாலும் பாரியளவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே கண்ணியமாக சுய கௌரவத்தோடு வாழக் கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில்இளைஞர்கள் வாக்களித்த முறை இதனை அம்பலப்படுத்தியது. மேற்சொன்ன இரண்டு காரணிகளும் எமது அரசியல் உரிமைகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. மாறாக எமதுஅரசியல்உரிமைகளிலிருந்து பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்தவை. எமது மக்களுக்கான விடுதலை பாதையென்பது இப்படியான முழுமையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.அப்படியானதொரு அணுகுமுறையை கடந்த 15 ஆண்டுகளாக நாம் பின்பற்ற தவறிவிட்டோம் என்பதே கசப்பான உண்மை.

கடந்த பாராளுமன்ற காலத்திற்கு முந்தைய பாராளுமன்ற காலமான 2015 - 2019 மட்டும் இதற்கு சற்று விதிவிலக்கானது. அந்த காலகட்டத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான நிலங்கள் விடுவிக்கப்பட்டதும், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டிருந்த எமது பிரதேசங்களில் அபிவிருத்திக்கும் பொருளாதார மீளெழுச்சிக்குமென முக்கியமான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டதை நாம் மறந்துவிடலாகாது. இவற்றிற்குப் பின்னால் தமிழரசுக் கட்சியினதும், குறிப்பாக எனதும் சிரத்தையான உழைப்பு இருக்கிறது.

ஆனால் இப்போது மீண்டும் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து மிகவேகமாக நடைபெறுவதையும் பல்வேறு அடக்குமுறைகள் எம்மீது பிரயோகிக்கப்படுவதையும் நாம் நன்கு அறிவோம். இவற்றை தடுப்பதென்பது, நாம் ஒரு தேசமாக இத்தீவிலே தொடர்ந்து வாழக்கூடிய எமது இருப்பை தக்கவைக்கின்ற, "தமிழ்த் தேசியத்தை" பாதுகாக்கின்ற பிரதானமான செயற்பாடாகும். வெற்றுக் கோஷங்களையும், போராட்ட மனநிலையைதூண்டுகின்ற பேச்சுக்களையும் நடைமுறைசாத்தியமற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டும் எமது மக்களுக்கான விடுதலைப் பயணத்தை ஒரு அங்குலம் கூடமுன்நோக்கி நகர்த்த முடியாது. நாம் ஒரு தனி தேசமென்பதை உரக்கச் சொல்லுகிற அதேவேளையில் ஒரு தேசமாக வாழ்வதற்கு வேண்டிய அணுகுமுறைகளை நாம் கைவிடக்கூடாது. எமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக நிலைத்திருந்து எமதுதன்மானத்திற்கும் சுய கௌரவத்திற்கும் ஏற்றவிதமான ஆட்சி மாற்றத்திற்கு சாத்வீக வழியில் போராடுகின்ற அதேவேளையில், தேர்தல் நேரங்களிலும் மற்ற தருணங்களிலும் கிடைக்கின்றசந்தர்ப்பங்களை உன்னிப்பான இராஜதந்திர நோக்கோடு நாம் கையாள வேண்டும்.

ஒரு ஜனநாயக அமைப்பிலே, எண்ணிக்கையிலே குறைவானவர்களாக இருக்கின்ற ஒரு தேசம் கைக்கொள்ளவேண்டிய அத்தியாவசிய அணுகுமுறை அது. நாம் வலியுறுத்துகின்ற தமிழ் தேசிய பிரச்சினை, இலங்கையின் பிரதானமான தேசிய பிரச்சினை என்பதை இலங்கையில் வாழும் மற்றைய சமூகத்தினருக்கும் நாம் பொருத்தமான முறைகளில் விளங்கப்படுத்த வேண்டும். எம்மை ஒருதேசமாக அங்கீகரிப்பது தமக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கின்ற உண்மையை அவர்களும் உணரச்செய்தல் வேண்டும்.

தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதியின் கட்சியினர் மாற்றத்துக்கான அரசியல் பயணத்தில் தம்மோடு இணைந்து கொள்ளுமாறு எமது மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அந்த மாற்றத்துக்கான போராட்டத்தில் நாம் ஈடுபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் எமது மக்கள் தொடர்ச்சியாக முக்கால் நூற்றாண்டு காலம் உரிமையோடு தேடுகிற ஆட்சி முறை மாற்றத்தை அடைய வேண்டுமாக இருந்தால் அந்த ஆட்சி முறையை சமஷ்டியை அச்சாணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, எமது மக்களின் அடையாளத்தை தொடர்ந்து பேணும் வகையான மாற்றத்துக்கு வழி செய்வதை நாம் ஆதரித்து வலுப்படுத்த வேண்டும். வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதித்துவம் செய்து பாராளுமன்றுக்கு ஒரு வலுவான அணியை அனுப்பக் கூடிய ஆற்றல் எமது கட்சிக்கு மட்டுமே உண்டு!

எமது போராட்டம் நீதிக்கான போராட்டம் நியாயமான அரசியல் உரிமைகளுக்கான போராட்டம். அநீதி, அநியாயம் ஒருபோதும் வென்றதில்லை, எமது போராட்டம் நீண்டநெடியதானதாக இருந்தாலும், அற வழியில் சாத்வீக முறைகளைக் கைக்கொண்டுஅதிலிருந்து அணுவளவும் பிசகாமல் போராடுவோமானால் எமக்கான நீதி கிடைத்தேயாகவேண்டும். அப்படியானதொரு தூய்மையான அறவழிப் போராட்டத்தில்இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன். எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு சேர்ந்து பயணிக்க தமிழரசுக் கட்சிக்கும், எனக்கும் உங்கள் ஆதரவை வாக்காக்க வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

எம். ஏ. சுமந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி)