மாற்றம் ஒன்றே மாறாதது | M A சுமந்திரன்
மாற்றம் ஒன்றே மாறாதது
நான் யார் என்ற கேள்வியும் அதற்கான தேடலும் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. அது அப்பன், அப்பப்பன், முப்பாட்டன் எண்ட பரம்பரையின் ஆணி வேராகவோ இல்லை பரம்பி் வாழும் எங்கள் இனத்தின் தேடலாகவோ இல்லை என்னுள் நானே என்னைத் தேடும் ஆத்மீகத் தேடலாகவோ இருக்கும்.
இங்கே ஒவ்வொருவனும் சமூகத்தில் தன் அடையாளம் என்னவென்றே தேடிக்கொண்டிருக்கிறான். அதைத் தக்க வைக்கவும் தகமைப்படுத்தவுமே பாடுபடுகிறான். பலர் அதைத் தொலைத்துவிட்டு தங்களை மட்டுமில்லை தங்கள் சமூகத்தையே நிர்க்கதியாக்கி விட்டார்கள்.
பிறக்கும் போது இன்னாரின் மகனாகி , வளர்ப்பின் போது இன்னாரின் பரம்பரையாகி, படிக்கும் போது இந்தப் பாடசாலையின் மாணவனாகி, பல்கலைக்கழகத்தில் பலதில் ஒருவனாகி, சமூகத்தில் தன்னை நிலைநிறுத்த ஒரு தொழிலாழியாகும் ஒவ்வொருத்தனுக்கும் தன் அடையாளங்கள் மாறிக்கொண்டே இருக்கும் .
இது தான் மாற்றமா? மாறாதது ஒன்றும் இல்லையா? அப்படியானால் மற்றவர்கள் மாறும் போது நானும் மாறுவது பச்சோந்தித் தனம் இல்லையா? வயதும் முதிர்ச்சியும் மாற்றமா? இல்லை வாழ்க்கையின் படிநிலைகளா?
அப்படியானால் இளையராஜாவை விட்டுவிட்டு இமானைக் கேட்டபது தான் மாற்றமா
இடியபத்துக்குப் பதிலாக இன்னோரு உணவைத் தேடுவது தான் மாற்றமா
காற்றை விட்டுவிட்டு பையில் அடைத்த பிராணவாயுவை சுவாசித்தல் மாற்றமா?
அப்படியானால் நான், என்னுடையது, என் சமூகம், என் உணர்வு, என் உரிமை , என் மண், என் சுவாசம் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு இன்னொரு உடலுள் கூடுவிட்டு கூடுபாய்ந்து இருப்பது தான் மாற்றமா?
இல்லை எனில்…..
ஆம் நீ என்பதே நீ மட்டுமல்ல நீ சார்ந்த சமூகம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படும் போது எவ்வாறு நீ உன் முடிவுகளை உனக்கான வசதிக்கும் வாய்ப்புக்குமாய் உன்நலன் மட்டும் கருதி எடுப்பாய். நீ வாழும் சமூகத்தை உதறிவிட்டு, உன் இனம், உன் மண்ணின் மணம், உன் சந்ததி, உன் கலை, உன் உடை, உன் கலாச்சார விழுமியங்கள் எல்லாவற்றையும் தொலைத்து நிற்பது தான் மாற்றமா?
என்னில் நம்பிக்கையிழந்து தேவதூதன் வந்து என்னைக்காப்பாற்றுவான் என்று ஏன் காத்திருக்க வேண்டும். தூதர்கள் வரட்டும், வருவோர் மாற்றங்களை ஏற்படுத்தட்டும் அது நிலைக்கட்டும் நாடு சுபிட்சம் பெறட்டும் அதற்காக மாற்றம் என்ற பேரில், பேரலையில், சுழல்காற்றில் சிக்கிச் காற்றின் போக்கெல்லாம் சருகாயப் பறக்காமல்;
“ நான் விருட்சமாகி, என் இனமாய் ஆழ வேரூன்றி, என் சனமாய் அகலக் காலூன்றி, மண்ணுக்காய் வித்தாகிய விதைகளின் உணர்வை உயிராக்கி, என் அடையாளத்தை தொலைக்காமல் நான் நானாய், நமக்காக நாமாய், தமிழனாய், தாயகத்து மைந்தனாய், இனத்தின் குரலாய், தன்மானத்தோடு தலைநிமர்ந்து தனி வழி பயணிக்க வேண்டும்”
நீ உன் அடையாளத்தைத் தொலைக்காமல் இருக்கும், உன்னை இழக்காமல் இருக்கும் மாறாத மாற்றம் ஒன்றே மாறாதது.
“ தலை நிமிர்ந்து நில்லடா “