தமிழ்த்தேசிய அரசியலில் பொருளாதாரம் எனும் கெட்ட வார்த்தை | ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண்

தமிழ்த்தேசிய அரசியலில் பொருளாதாரம் எனும் கெட்ட வார்த்தை | ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண்

“It’s the economy, stupid”…..பொருளாதாரம் எனும் கெட்ட வார்த்தை.

தமிழர் தாயகப் பகுதிகள் பொருளாதார ரீதியில் இலங்கைத் தீவில் பின்தங்கிய பகுதிகளாகவே விளங்குகின்றன. யுத்தம் நடந்து கொண்டு இருக்கையிலும், தென்னிலங்கை அதிவேகமாக பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்தது என்பது நாம் கேட்க விரும்பாத கசப்பான உண்மை. சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை அடைந்த அபரிதமான பொருளாதார முன்னேற்றம், மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் வாங்கிய அளவுக்கு மிஞ்சிய கடன்களாலும், நாட்டையே விழுங்கிய ஊழல்களாலும், கோத்தாவின் ஆட்சியில் வங்குரோத்து நிலைமையை அடைந்தது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிலவிய, நிலவும் அவலமான பொருளாதார சூழ்நிலையிலும், பொருளாதார அபிவிருத்தி என்ற கெட்ட சொல்லை தமிழ் அரசியல் பரப்பில் பாவிப்பதே ஒரு குற்றமாக கருதப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி என்பது பென்னாம் பெரிய தொழிற்சாலைகள் கட்டுவதும், அதிவேக சாலைகள் அமைப்பதும், அதன் விளைவான சுற்றுச் சூழல் மாசுபடுதலும், கலாச்சார சீரழிவும் என்று தமிழ் சமுதாயத்தை ஒரு குறுகிய வட்டத்திற்குள் யாரோ அடைத்து வைத்துவிட்டார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

எங்கள் விழுமியங்கள் அழியாது, எங்கள் கலாச்சாரத்தைப் பேணிக் கொண்டு, எங்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொண்டு, நாங்கள் பொருளாதார அபிவிருத்தி எனும் பாதையில் நடக்கலாம், நடக்கத் தொடங்க வேண்டும். விவசாயம், கடற்தொழில், IT தொழில்நுட்பம் மற்றும் medical & eco tourism எனும் நான்கு துறைகளை தூண்களாகக் கொண்டு எமது பொருளாதாரம் மீளக் கட்டியெழுப்பப்படலாம்.

கிராமங்களை மையமாகக்கொண்டு, உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கவல்ல, அயலட்டை மக்களிற்கு வேலைவாய்ப்புக்களை வழங்கவல்ல, விவசாய மற்றும் கடற்தொழில் சார்ந்த தொழில் முயற்சிகள், சுற்றுச்சூழலையும் பாதிக்காது, பெரிய முதலீடுகளிற்கும் தேவையிருக்காது.

எங்கள் ஊர்களில் நிறைந்திருக்கும் பொறியியலாளர்களின் அறிவைப் பயன்படுத்த தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்துறைகளும், எங்கள் திறமையான வைத்தியர்களை நம்பி medical tourism உம் எங்கள் தாயக மண்ணில் நன்றாகவே விதைவிட்டு வளரும். தாயகப் பூமியெங்கும் நிறைந்திருக்கும் இயற்கை அழகை அழிக்காமல் eco tourism உம் நல்ல முறையில் நிலை கொள்ளும்.

இந்த முயற்சிகள் எதுவுமே பாரியளவில் செய்ய வேண்டியதில்லை. “சிறியதும் அழகுதான் (small is also beautiful)” எனும் கருப்பொருளைத் தழுவி, சிறிய முயற்சிகளாகவே அவை முன்னெடுக்கப்படலாம். பல பல சிறிய முயற்சிகள் முளைவிடத் தொடங்க, எங்களது சமூக பொருளாதார அபிவிருத்தி இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கிவிடும்.

அதேவேளை, போரின் காரணமாக புலம்பெயர்ந்து, தங்களையும் பலப்படுத்திக் கொண்டு, போராட்டத்திற்கும் பலம் சேர்த்த ஒரு தலைமுறை, “நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்” எனும் இன்னும் நிறைவேறாத வேட்கையுடன், முதுமையை நோக்கியும் மரணத்தை நோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. 1950 களிலிருந்து 1970 கள் வரையில் பிறந்த இந்த தலைமுறைகள் தான், போரால் அழிவுண்ட எங்கள் தேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய நிபுணத்துவத்தையும் நிதிவளங்களையும் தம்மகத்தே கொண்டிருக்கிறது.

தாயகத்தை நேசித்துக் கொண்டு, புலம்பெயர் தேசத்தில் வாழும் இந்தத் தலைமுறையை எங்களின் தேசத்தின் மீள்நிர்மாணத்திற்கு களமிறக்க வேண்டிய காலமிது. எங்கள் தேசத்தை ஆழமாக நேசிக்கும் இந்தத் தலைமுறைக்குப் பின்னர் வரும் தலைமுறைகள், இந்தத் தலைமுறைக்கு இருக்கும் அதேயளவு பற்றுடன் தாயகத்திற்கு உதவி செய்யப் போவதில்லை.

போரிற்கு பின்னரான காலப்பகுதியில் எங்களது பலமாக விளங்கும் புலம்பெயர் சமூகத்தை, எங்கள் தாயகத்தின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்ப பயன்படுத்தப் போகிறோமா? இல்லை காலம் அவர்களையும் காவு கொள்ள விட்டு விடப்போகிறோமா?

2022 ஆண் ஆண்டில் வங்குரோத்து நிலைமையை எட்டிய இலங்கையின் பொருளாதாரம், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பொருளாதார நிபுணர்களின் பங்களிப்புடனும், இலங்கையின் மிகத்திறமையான அரச பொருளாதார அதிகாரிகளின் செயற்பாட்டாலும் மீளெழத் தொடங்கிவிட்டது. இலங்கையின் பொருளாதார மீளெழுச்சிக்கு இந்தியாவும், அமெரிக்காவும், ஜப்பானும், சீனாவும் உதவ முண்டியடிக்கின்றன.

சீரழிந்து போன இலங்கையின் பொருளாதாரம் எப்படியும் இன்னும் சில ஆண்டுகளில் மீட்சி கண்டுவிடும். ஆனால், எங்களின் பிரதேசங்களின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியமைக்கும் பொறுப்பு எங்களைச் சார்ந்ததல்லவா? எங்களிடம் இருக்கும் இயற்கை வளங்களையும், தாயகத்திலும் புலத்திலும் இருக்கும் நிபுணத்துவத்தையும், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் சொந்தங்களின் பொருளாதார பலத்தையும் முதலீடாக்கி, எங்களை நாங்களே அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லத் தடையாக இருப்பது நாங்கள் அல்லவா?

அவர்கள் காலத்தில் இருந்தது போல், வெளிநாடுகளிலிருந்து வரும் நிபுணர்களை ஒருங்கிணைத்து திட்டங்களை செயற்படுத்தும் பலமான கட்டமைப்புக்கள் தாயகத்தில் இல்லாத இன்றைய சூழ்நிலையில், புலத்தில் வாழும் எங்கள் நிபுணர்களின் மீள்வருகையும், அவர்களின் பங்களிப்பையும் உள்வாங்குவதற்குமான கட்டமைப்பை ஏற்படுத்த, வடக்கு கிழக்கில் ஒரே அணியாக போட்டியிடும் தமிழர்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி முன்வரவேண்டும்.

தமிழரசுக் கட்சியானது, தமிழர்களின் அரசியல் தீர்வு முயற்சிகளிற்கு மட்டுமன்றி, சமூக பொருளாதார அபிவிருத்தி முன்னெடுப்புக்களிற்கும் தலைமைத்துவம் வழங்கவேண்டியது காலத்தின் கட்டாயம். பொருளாதார அபிவிருத்தி முன்னெடுப்புக்களிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான சரியான செயற்பாட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்த தமிழரசுக் கட்சி முன்வரவேண்டியதும், எங்கள் நிகழ்கால இருப்பைத் தக்கவைக்கவும், எங்கள் இளைய சமுதாயத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்குமான, உடனடி அவசரத் தேவையாக உள்ளது.

ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண்