2024 இல் தமிழ்த் தேசியம் தேவையா?

2024 இல் தமிழ்த் தேசியம் தேவையா?

2024 இல் தமிழ்த் தேசியம் தேவையா?

இந்த நாட்டுக்கு வயது எத்தனையோ, அத்தனை வயது தமிழரசுக் கட்சிக்கும் உண்டு.

அன்றிலிருந்து இன்று வரை தமிழர் தம் சுயாட்சிக்கான ஓயாத அரசியற் குரலாகத் தமிழரசுக் கட்சி ஒலித்து வந்திருக்கிறது.

இன்று எம் மக்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. போரின் பின்னான இந்தப் 15 ஆண்டுகளில் தனித்த தமிழ் அரசியலால் விளைந்த நன்மைகள் என்ன? தமிழ்த் தேசியம் இன்றும் அவசியமானதா? தென்னிலங்கையில் மக்கள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் மாற்றத்தில் நாமும் இணைந்து கொண்டால் என்ன? போன்ற கேள்விகளை எமது மக்கள் பலர் கேட்கிறார்கள்.

இந்த நிலைக்கு மக்கள் வந்திருப்பதற்கு போரின் பின்னான தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் நாம் கண்ட மறுதலிக்க முடியாத கோளாறுகள் பலவும் காரணம் என்பது நிதர்சனம். இதற்கு இந்த அரசியல் வெளியில் பயணித்து தவறியவர்களுக்கும், அப்படிப்படவர்களைக் கிரமமாக அப்புறப்படுத்தத் தவறியவர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது.

நிற்க, தமிழ்த் தேசிய அரசியலுக்கு இன்றும் தேவைப்பாடு இருக்கிறதா என்ற கேள்வியை மாற்றம் வேண்டும் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய கடைப்பாடு இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியோடு ஊழல் எதிர்ப்பு, அரசியல் கலாச்சார மாற்றம், சட்டத்தின் முன் சமவுரிமை என்ற விடயங்களில் தமிழரசுக் கட்சிக்கு உடன்பாடுண்டு. அந்த விடயங்களிலே நாம் அந்தக் கட்சியின் அரசாங்கத்தோடு ஒத்துழைப்போம்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியின் சிறுபான்மைகள் தொடர்பான நிலைப்பாடுகள் மாற வேண்டும். எண்ணிக்கையில் சிறிதான மக்கள் கூட்டங்களுக்குப் பெரும்பான்மை மக்களது அரசியல் அபிலாசைகளைத் தாண்டிய, பிரத்தியேகமான அரசியல் அபிலாசைகள் இருக்கின்றது என்பதை அந்தக் கட்சி வெளிப்படையாக ஏற்க, குறிப்பாக சிங்கள மக்களிடையே சொல்ல இன்றும் தயங்கி வருகிறது.

ஊழலற்ற இலங்கை என்பது மட்டும் தமிழர் எம் அரசியற் பிரச்சினைக்குத் தீர்வாகிவிடாது. தமிழர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைத் தாண்டி ஆளும் கட்சிக்குப் கணிசமான வாக்குகளைச் செலுத்துவதென்பது, தமிழர்களுக்குத் தேசியப் பிரச்சினை ஒன்றில்லை என்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுவான நிலைப்பாட்டை மெய்ப்பிப்பதாகவே அமையும். அனுர குமார திசானாயக 2015-2017 வரை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதாகச் சொல்லியிருக்கிறார்.

தமிழ்த் தேசிய வெளியிலிருந்து தமிழ் வாக்குகள் அகல்வது, அந்த அரசியலமைப்பு நிறைவேற்றல் நடவடிக்கையில் தமிழரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாட்டை நீர்த்துப் போகப்பண்ணும். இந்தத் தேர்தலில் 2024 இல் தமிழ்த் தேசிய அரசியல் அவசியமா என்ற கேள்விக்குப் மக்கள் சொல்லும் பதில் கனதியானது. அந்தப் பதில் தீர்க்கமான “ஆம்” ஆக இருக்க வேண்டும். இல்லாது போனால் எமது பிரதேசங்களில் (எமது ஆட்புலத்தில்), எமது வாழ்வாதாரத்தை (எமது ஆதாரத்தை), நாமே ஆளுகை செய்யும் எமது நீண்ட கால அரசியல் போராட்டத்தின் அடிப்படைகளையே கேள்விக்குட்படுத்துவதாய் வந்து முடியும்.

இதனாற் தான் வேட்பு மனுத்தாக்கிய கையோடு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவின் சிலைக்கு நாம் மாலை அணிவித்தோம். நாம் அன்றும் இன்றும் ‘தமிழ் அரசு’க் கட்சி.